உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் நேற்று (ஜன.22), பிராண பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அக்கோயிலைப் பார்வையிடவும், பாலராமரை வழிபடவும் தற்போது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்திக்குப் படையெடுக்கின்றனர்.
இந்த நிலையில், திமுக நிர்வாகி ஒருவர், ’அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு; அயோத்தி ராமருக்கு பிடித்தது மாட்டுக்கறி பிரியாணி’ எனச் சமூக வலைத்தளத்தில் படத்துடன் பதிவிட்டிருந்தார். (தற்போது இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது) இந்த விஷயம் அறிந்த அப்பகுதி பாஜகவினர் அவர் வீட்டை முற்றுகையிட்டதாகவும், இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் பற்றிய செய்திகளே அனைத்து ஊடகத் தளங்களிலும் முதன்மை பெற்றிருந்து. அப்போது ராமர் பற்றிய வதந்திகளும் இணையத்தில் வைரலாகின. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் ஷீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (சரத் பவார் அணி) சேர்ந்த எம்எல்ஏ ஜிதேந்திர அவாத், “ராமர் நம்முடையர். அவர் வெகுஜனங்களில் தலைவர். அவர் நம்மைப்போல உணவுப்பழக்கம் கொண்டவர். கானகத்தில் அவர் வேட்டையாடி உணவருந்தியர். ராமர் சைவம் சாப்பிட்டவரில்லை. அவர் அசைவம் உண்டவர். 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தவர் எங்கே சென்று சைவ உணவைத் தேடியிருப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தி வைரலானபோது அவருக்கு எதிராக இந்து அமைப்பினரும், ஆர்.எஸ்.எஸும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு நேற்று, பாஜக ஆளும் 5 மாநிலங்கள் சார்பில் சொமேட்டோ நிறுவனத்திடம் அசைவ உணவு டெலிவரி செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தது. அதாவது அயோத்தி அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
இந்த மாநிலங்களின் அரசுகள் சார்பில்தான் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பொதுமக்களுக்கு அசைவ உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த ஒருநாள் மட்டும் தற்காலிகமாக அசைவ உணவுகள் விநியோகத்தை சொமேட்டோ நிறுத்தி வைத்திருந்தது. இதனாலும் சர்ச்சை வெடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட பல பயனாளர்கள் எக்ஸ் தளத்தில் சொமேட்டோ மீதான தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். அதற்கு சொமேட்டோ, அரசின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பதிலளித்திருந்தது.
இதை ராம பக்தர்கள் வரவேற்றபோதும், சொமேட்டோவின் விளக்கத்தை பலரும் வலைதளத்தில் விமர்சித்தனர். குறிப்பாக மிரினல் என்பவர், ’புதிய இந்தியாவிற்கு வரவேற்கிறோம். இப்போது உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட நம்மிடம் இல்லை. பெரும்பான்மையாக இருப்பவரை திருப்திப்படுத்த வணிகங்கள் பாதிக்கப்படுகிறது. இது ஒரு பாசிச நாடு. சொமேட்டோ மற்றும் ஸ்விக்கிற்கு இது அவமானம்’ எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போது பொதுஇடங்களில் அசைவம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் ஒரு தனிநபர் அவரது விருப்பத்திற்கேற்ற உணவை, அவர் வீட்டில்கூட சாப்பிடக்கூடாது எனச் சொல்வதற்கு நீங்கள் யார்’ எனவும், ‘இந்தியாவில் இந்துக்கள் மட்டும் வாழவில்லை, அரசு மக்களின் உணவில் கைவைக்க முடியாது’ எனவும் சொமேட்டாவை சகட்டுமேனிக்கு அதில் திட்டி பதிவிட்டுள்ளர். இன்னும் சிலரோ, பொதுநல வழக்கு தொடரவேண்டும் எனப் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் ராமர் அசைவ உணவுகளை உட்கொண்டார் என்று நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழக ஆன்மிகப் பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், ”ராமர் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். தெளிவாக, ராமாயணத்தில் உள்ளது. ஆனால் ஓர் இடத்தில் மட்டும், அதாவது சீதை காணாமல் போன பிறகு, அப்போது கைங்கர்யம் செய்துகொண்டு வந்த இலக்குவனும், ராமனும் மாமிசம் புஜிக்கவில்லை எனவும், ஆனால் ராமர் மாமிசம் சாப்பிட்டார். இதிகாசத்தின் ஒருகாலக்கட்டத்தில் பிராமணர்களும் மாமிசம் சாப்பிட்டனர். ராமாயணத்தில் தெளிவாக இருக்கிறது. வசிஷ்டருக்கு முயல் மாமிசம் சமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாமிசம் போஜனம் பிராமணர்களிடமும் இருந்தது” என யூடியூப் சேனலில் ஒன்றில் பேசியிருந்தார். அன்னபூரணி பட விவகாரம் தொடர்பான சர்ச்சை எழுந்த போது அவர் இந்த விளக்கத்தை அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.