ராகுலின் தளபதி TO அமேதி வேட்பாளர்... யார் இந்த கிஷோரி லால் சர்மா? 40 ஆண்டுகளுக்குப் பிறகு வாய்ப்பு!

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை அமேதி வேட்பாளராக அறிவித்துள்ளது.
ராகுல், கே.எல்.சர்மா
ராகுல், கே.எல்.சர்மாட்விட்டர்
Published on

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முயன்று வருகிறது. திண்ணைப் பிரசாரம் தொடங்கி, தேர்தல் அறிக்கை வரை அனைத்தையும் பார்த்து பார்த்து காய் நகர்த்தி வருகிறது காங்கிரஸ். இதுவரை இரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட சூழலில், 3ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் கடந்த தேர்தல்களில் ராகுல் காந்தி போட்டியிட்டு வந்த அமேதி தொகுதியில் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில், ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வத்ரா போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அத்தோடு நிற்காமல், “அமேதி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்றும் கூறி வந்தார். இவை அத்தனையையும் புறந்தள்ளி, காங்கிரஸ் கட்சியின் தலைமை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை அமேதி வேட்பாளராக அறிவித்துள்ளது.

யார் இந்த கிஷோரி லால் சர்மா?

கிஷோரி லால் சர்மா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், கடந்த 40 ஆண்டுகளாக, அவர் உத்தபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வருவதால், கிட்டத்தட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவராகவே பார்க்கப்படுகிறார் கிஷோரி லால் சர்மா. 1983 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்ய அமேதி தொகுதிக்கு வந்த கிஷோரி லால் ஷர்மா, அப்போதிருந்து தற்போது வரை அமேதி மற்றும் ராய் பரேலி தொகுதிகளில் களப்பணியாற்றி வருகிறார்.

சாதாரண இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராக 1983-ஆம் வருடம் அமேதி வந்த கிஷோரி லால் சர்மா, நிரந்தரமாக உத்தர பிரதேசத்திலேயே தங்கி விட்டார் என்கின்றனர் அவரை நன்கறிந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். மக்களவைத் தேர்தலோ, மாநில சட்டமன்ற தேர்தலோ எதுவாக இருந்தாலும், காங்கிரஸின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வந்தவர்தான் கிஷோரி லால் சர்மா. 63 வயதான இவர் இன்றளவும் சுறுசுறுப்பாக களப்பணிகளில் இளைஞர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக பணியாற்றுவதாக பாராட்டப்படுகிறார் ஷர்மா.

இதையும் படிக்க: உ.பி.| ஓடும் ரயிலில் மனைவிக்கு ’தலாக்..’ தப்பியோடிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு!

ராகுல், கே.எல்.சர்மா
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி... காங்கிரஸ் தலைமை அதிரடி அறிவிப்பு!

ராகுல், சோனியா ஆகியோருக்கு உறுதுணையாக அமேதியில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை கவனித்த கிஷோரி லால் சர்மாவின் செல்வாக்கு கட்சியில் படிப்படியாக அதிகரித்ததையடுத்து, பீகார் மாநிலத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக, 40 ஆண்டுகளாக தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்ட பிறகு, முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் கிஷோரி லால் சர்மா. அந்த தொகுதியின் வாக்காளர்கள் இவருக்கு நன்கு பரிச்சயம் என்பதால் பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி கடும் போட்டியை சந்திக்கலாம் என கருதப்படுகிறது.

சஞ்சய் காந்தி ஒருமுறை, ராஜீவ் காந்தி நான்குமுறை, சோனியா காந்தி ஒருமுறை, ராகுல்காந்தி 3 முறை என காந்தி குடும்பத்துக்கு மிகுந்த செல்வாக்கு மிக்க தொகுதியாக அமேதி தொகுதி விளங்குகிறது. கடந்தமுறை ராகுல் காந்தியே இந்தத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது, காந்தி குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் களத்திலும் இல்லை ஆனாலும் இந்தத் தொகுதியை நன்கறிந்த சர்மா நிச்சயம் தீவிரமாக வாக்குகளை சேகரிப்பார் என்பதை மறுப்பதற்கில்லை.

இதையும் படிக்க: 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo

ராகுல், கே.எல்.சர்மா
ரேபரேலி தொகுதியில் ட்விஸ்ட்! ராகுலுக்கு சீட்.. பிரியங்கா களமிறங்காதது ஏன்? காங். போடும் கணக்கு என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com