ஏர்செல் - மேக்சிஸ் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வரும் 23 வரை தடையை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித் து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்கிறது.
இதனிடையே, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த சிபிஐ நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் கைதுக்கான தடை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றும் இந்த கைதுக்கான தடையை, வரும் 23 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதமன்றம் உத்தர விட்டுள்ளது.