செய்தியாளர் - ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்தன் போப்பண்ண (32). இவர் பெங்களூருவின் காமாட்சி பாளையம் அருகே உள்ள கரேக்கல் பகுதியில் தாய் தந்தையுடன் வசித்து வந்தார். இவருடைய தாய் உடல்நலம் சரியில்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய தந்தை சுரேஷ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் மனைவியைப் பார்த்துக் கொள்ளாமல் எந்த நேரமும் மதுபோதையில் இருந்து வந்துள்ளார் சுரேஷ்.
இந்தநிலையில் நேற்று இரவு, வழக்கம் போல் , தனது மகனிடம் மது அருந்துவதற்குப் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் சுரேஷ். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் மகனை அடித்துள்ளார். இதனால் பயந்து போன நர்தன் போப்பண்ண, தந்தை சுரேஷை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் சமாதானம் ஆகி விடுவார் என நினைத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்துள்ளார். பின்னர் சுரேஷின் கூச்சல் சத்தம் குறைந்துள்ளது. இதனால் தந்தை சமாதானம் ஆகிவிட்டதாக நர்தன் போப்பண்ண நினைத்துள்ளார்.
ஆனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சுரேஷ், உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அறையின் கதவை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் அந்த துப்பாக்கி தோட்டா கதவைப் துளைத்துக் கொண்டு, ஹாலில் அமர்ந்திருந்த நர்தன் போப்பண்ண தொடையில் பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த நர்தன் போப்பண்ண, தன் சகோதரிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருடைய சகோதரி அருகில் உள்ள, உறவினர் ஒருவருக்குத் தகவல் தெரிவித்து வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவருடைய உறவினர் வீட்டிற்குச் சென்று பார்க்கும் போது, சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்தைக் கடந்துவிட்டது. பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த நர்தன் போப்பண்ண மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற, காமாட்சி பாளையம் போலீசார் சுரேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மது அருந்தப் பணம் கேட்டு தகராறு செய்து விட்டு, பெற்ற மகனைத் தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.