இந்திய பாலியல் தொழிலாளியின் கதையை கேட்டு, பில்கேட்ஸ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இப்போது தெரிய வந்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான பில்கேட்ஸின் கேட்ஸ் பவுண்டேஷன், எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பலமுறை அவர் இந்தியா வந்துள்ளார். அப்போது, பாலியல் தொழிலாளி ஒருவரின் கதையை கேட்டு அவர் கண்ணீர் விட்டு அழுதார் என்று புதிய புத்தகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
கேட்ஸ் பவுண்டேஷனின் தலைமை அதிகாரியாக இருந்த அசோக் அலெக்ஸாண்டர் ’எ ஸ்டேரஞ்சர் ட்ருத்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவர், தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டரின் மகன். அந்த புத்தகத்தில், இந்திய பாலியல் தொழிலாளி களின் வாழ்க்கை, அவர்களின் வெற்றிக்கதைகள், திறமை, அவர்களிடம் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்கள் போன்றவற்றைப் பற்றி எழுதியுள்ளார். இந்தியா வரும்போது பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் மற்ற விஷயங்களை விட்டுவிட்டு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டிருந்தனர் என்று குறிப்பிடும் அசோக், பில் கேட்ஸ் கண்ணீர் விட்டு அழுத சம்பவத்தை நெகிழ்ச்சியாக அதில் எழுதியுள்ளார்.
கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு இந்தியா வந்தபோது, பாலியல் தொழிலாளிகளை சந்தித்தார்கள், பில் கேட்ஸும் அவர் மனைவியும். அப்போது தங்கள் கதைகளை ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கினர். மகளையும் குடும்பத்தையும் காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக தன்னை மாற்றிக்கொண்ட ஒரு பெண், அந்த தொழிலை குடும்பத்தினருக்குத் தெரியாமல் மறைக்க பட்ட கஷ்டங்களை வேதனையுடன் கூறினார். அப்படியிருந்தும் அவள் மகளுடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
இதனால் மாணவர்கள், அவர் மகளை கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கி இருக்கிறார்கள். மன உளைச்சளுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை குறிப்பில், ’இனி இந்த தொழிலை செய்யாதே அம்மா’ என்று இருந்தது.
இந்தக் கதையை அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது, பில்கேட்ஸின் அருகில் இருந்த நான் அவரது முகத்தைப் பார்த்தேன். அவர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அமைதியாகக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் அசோக்.