சாலையில் எச்சில் துப்பியவரை வளைத்துப் பிடித்து அதிகாரிகள் நூதன தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகராட்சியில் சாலையை அசுத்தம் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை சமீப காலமாக பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் குற்றம் செய்பவர்களை கண்டறிய சாலைகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் ஆகியோரை கண்டறிந்து அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில், சூரத் நகராட்சி அத்வாலினிஸ் நகர்ப் பகுதியில் உள்ள சாலையில் ஒருவர் பைக்கில் செல்லும் போது எச்சில் துப்பியபடியே சென்றுள்ளார். அவரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு தோப்புக்கரணம் போடும் தண்டனையை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். மேலும் தான் செய்தது தவறு என்பதை கூறிக்கொண்டே தோப்புக்கரணம் போடுமாறு அறிவுறுத்தினர். அதன்படி அந்த நபரும் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்டுகொண்டே தோப்புக்கரணம் போட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.