தனது தம்பி இறந்ததால் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு ஒரு நபர் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல், வேலையின்றி வருமானமும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது வாழ்க்கையும் சோகக் கடலில் மூழ்கியுள்ளது.
அந்த வகையில் சோகத்தில் சிக்கிய ஒருநபரின் தகவல்கள் தான் இது. பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஹரியானாவில் புலம்பெயர்ந்து பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவர் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் அவரது உடன் பிறந்த தம்பி இறந்துவிட்டதாக போனில் தகவல் கிடைத்துள்ளது. இதனால் உடனே ஊருக்கு செல்ல நினைத்த அவரிடம் இருந்தது ஒரு சைக்கிள் மட்டும் தான்.
ஹரியானாவில் இருந்து பீகாரில் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் 1,280 கி.மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். இருந்தாலும் அவர் வேறு வழியில்லாமல் சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கி சென்றுகொண்டிருக்கிறார். அவர் தற்போது டெல்லியில் எல்லைப்பகுதியான ஃபரிதாபாத்தில் உள்ளார். இன்னும் 8 முதல் 10 நாட்கள் சைக்கிளில் பயணித்தால் தான் அவர் ஊர் சென்று அடைய முடியும் எனக் கூறப்படுகிறது.