பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, அவரது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. அதிர வைக்கும் இந்தக் கொலை, அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டின் காரணமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில், வயாலிக்காவல் பைப்லைன் காவல் நிலையத்துக்கு வந்த அலைபேசி தகவல், காவல் துறையினரை அதிர வைத்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கே துர்நாற்றம் வீசிய அடுக்குமாடி வீட்டை நோக்கி சென்றுள்ளனர்.
முதல் மாடியில் உள்ள வீட்டினுள் சென்றபோது, அங்குள்ள குளிர்பதனப் பெட்டியில், ஒரு பெண்ணின் உடல், கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு, கூறு போட்டு, 30 துண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு கொடூரமான கொலையை எதிர்பார்க்காத காவல்துறையினர் அதிர்ந்துபோயினர். உடல்பாகங்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
30 துண்டுகளாக கூறுபோடப்பட்ட பெண்ணின் பெயர் மகாலட்சுமி. நேபாளத்தைச் சேர்ந்தவர். கணவரையும் பிள்ளைகளையும் பிரிந்து, தனியாக அந்த வீட்டில் வசித்துள்ளார். அருகே உள்ள வணிக வளாகத்தில் வேலைசெய்துள்ளார். கடந்த சில நாள்களாக அவரது வீடு பூட்டியே இருந்துள்ளது. இரண்டு நாள்களாக அவர் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுபற்றி மகாலட்சுமியின் தாய்க்கும் சகோதரிக்கும், அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் நேரில் சென்று, மாற்றுச்சாவி மூலம் கதவைத் திறந்துள்ளனர். அப்போதுதான், இந்த பயங்கரமான, கொடூரமான கொலையை அறிந்துள்ளனர். கண்டந்துண்டமாக வெட்டப்பட்ட உடல் பாகங்களில் புழுக்களும் நெளிந்துள்ளன.
காவல் துறையினரின் விசாரணையில், மகாலட்சுமியின் அலைபேசி, கடந்த 2ஆம் தேதி முதல் அணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மிக மிக கொடூரமாக நடந்துள்ள இந்தக் கொலை குறித்து விசாரிக்க ஆறு தனிப்படைகளை அமைத்தனர். மகாலட்சுமியின் அலைபேசியை கைப்பற்றி, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மகாலட்சுமியின் பழக்கம் எப்படி இருந்தது என்பதையும் ஆய்வு செய்தனர்.
தினமும் காலையும் மாலையும் மகாலட்சுமியை பிக் அப் - டிராப் செய்து வந்த ஓர் இளைஞர் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சலூன் கடையில் வேலை செய்து வரும் அந்த இளைஞரின் அலைபேசி, கடந்த 10 நாள்களாக அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞரை தேடி வரும் காவல்துறையினர், நெலமங்களத்தில் வசிக்கும் மகாலட்சுமியின் கணவரிடமும் விசாரித்து வருகின்றனர். சுற்றுப்புறத்தில் இருப்போருடன் மகாலட்சுமி பெரிதாக பேசிக்கொள்வதில்லை என்பதால், அவர் காணாமல் போனதும், கொடூரமாகக் கொல்லப்பட்டதும், அந்தப் பகுதி மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
வயாலிக்காவல் பைப்லைன் பகுதியில், அடிக்கடி மின்வெட்டு நேரிட்டதால், ஃபிரிட்ஜில், 30 துண்டுகளாக வைக்கப்பட்ட மகாலட்சுமியின் உடல், கெட்டுப்போனதுடன், புழுக்களும் நெளிந்துள்ளன. மின்வெட்டு நேரிட்டபோது, ஃபிரிட்ஜ் வேலை செய்யாமல், துண்டாடப்பட்ட உடல் பாகங்கள் கெட்டுப்போய் நாற்றமெடுத்துள்ளன.
இதனிடையே, ஃப்ரிட்ஜில் கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை விரைந்து கூராய்வு செய்து, அதன் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது காவல்துறை தனிப்படையினர். 15 நாள்களுக்கு முன்னரே கொலை நடந்திருக்க வேண்டும் என்கிறது காவல்துறை.
ஃபிரிட்ஜ் தவிர, வீட்டின் எந்தப் பகுதியிலும் ரத்தக்கரை இல்லை என்பதால், கொலை அந்த வீட்டில்தான் நடந்ததா, அல்லது வேறு எங்கும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்று, சூட்கேஸில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது பெங்களூருவில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களை இவை எழுப்பியுள்ளன.