சூரத்தில் நிலத்தடியில் இருந்த மண் திடீரென எரிமலை போல வெளிவந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சூரத் நகரில் ஹிராபாக் வட்டம் விட்டல்நகர் என்ற பகுதியில், பிப்ரவரி 13-ம் தேதி எல்லா பக்கமும் திடீரென சேறு நிரம்பி வழிந்தோடியுள்ளது. முதலில் சாலைகளில் பெருக்கெடுத்த சேறு, சில நிமிடங்களிலேயே வீடுகளுக்குள்ளும் நுழைந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. உண்மையில் இது எப்படி, எதனால் நடந்தது என்பது கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தற்போது விடைகிடைத்துள்ளது.
அதன்படி, சூரத்தில் நடக்கும் மெட்ரோ வேலைகளின் போது, சாக்கடையில் ஏற்பட்ட கசிவு காரணமாக நிலத்தடி மண் மொத்தமாக வெளியேறி சாலையில் சேறாக பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. இதில் கழிவுநீருடன் சேர்ந்து சேறாக வெளியேறும் மண்ணால், அங்கிருக்கும் மக்கள் தொற்று அபாயத்தில் உள்ளனர். பலருடைய வீடுகளுக்கும் சேறு செல்ல தொடங்கிவிட்டதால், அப்பகுதியில் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.
புகைப்படமொன்றில், ஒரு வீட்டில் டேப்பில் இருந்து நீருக்கு பதில் சேறு வருகின்றது. பலருடைய வீட்டிலும் ஃப்ரிட்ஜ், கட்டில் போன்றவைகூட சேற்றாலும் மண்ணாலும் செயல்படாமல் போயுள்ளது. பல பொருட்கள் சேதமாகி இருப்பதால், தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுமென தெரிவித்துள்ளனர். எரிமலை போல மண் எழுந்திருப்பதாக சொல்லி அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.