தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, 17 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவக்கோரி போராடிய தாய்க்கு, அரசு அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டினர்.
தேசியம் பட்டி பகுதியில் கணவரை பிரிந்து வாழும் கடல் செல்விக்கு, இரண்டு பெண் குழந்தைகளும், 17வயதில் காளி ராஜ் என்ற மகனும் உள்ளனர். மகன் காளி ராஜ்க்கு, பிறவியிலேயே கை, கால்கள் செயலிழந்து போனதால், இவரை கைக்குழந்தையை போன்று பராமரித்து வருகிறார் தாய் கடல் செல்வி.
மற்றொரு புறம் முறையான வீடில்லாத இக்குடும்பத்தின் நிலை அறிந்த, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, தகர சீட்டால் வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மாற்றுத்திறனாளி மகன் காளிராஜுக்கு, 17ஆண்டுகளாக அரசின் உதவிகள் கிடைக்காமல் அவதியடைந்து வந்தார்.
இதனையடுத்து இக்குடும்பத்தின் நிலை குறித்து நமது செய்தியாளர், கோட்டாட்சியரிடம் கேட்ட போது, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில், அரசு அதிகாரிகள் உடனடியாக காளி ராஜை நேரில் சந்தித்து அவருக்கு தேவையான உதவிகளையும், சக்கர நாற்காலியையும் வழங்கினர். இந்த உதவிக்கு தாய் கடல் செல்வி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார் .