அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் கருவறைக்குள் திடீரென குரங்கு ஒன்று நுழைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.22ஆம் தேதி, பிராண பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலைப் பார்வையிடவும், பாலராமரை வழிபடவும் தற்போது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்திக்குப் படையெடுக்கின்றனர். இதனால் கூட்டம் அங்கு அலைமோதி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை குரங்கு ஒன்று தெற்கு வாசல் வழியே திடீரென ராமர் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து, ராமர் சிலையை நோக்கி முன்னேறிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அது உற்சவர் சிலையை தரையில் தூக்கி வீசிவிடக் கூடும் என பயந்தனர்.
இதையடுத்து, கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்கள், குரங்கை நோக்கி ஓடினர். ஆனால் எந்தவித பிரச்னையும் இன்றி குரங்கு வடக்கு வாசலை நோக்கிச் சென்றது. அதன் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் கிழக்கு வாசல் வழியாக வெளியேறியது.
இதையடுத்து, ஸ்ரீபாலராமரை தரிசிக்க அனுமனே நேரில் வந்தது போன்று இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர். இந்த சம்பவம் அயோத்தி கோயிலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. குரங்கு ஒன்று அயோத்தி ராமர் கோயிலுக்குள் நுழைந்ததாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.