கேரளத்தில் ரயிலில் போகும்போதே கொரோனா பாஸிட்டிவ்...  மருத்துவமனையில் தமிழகப் பயணி

கேரளத்தில் ரயிலில் போகும்போதே கொரோனா பாஸிட்டிவ்... மருத்துவமனையில் தமிழகப் பயணி

கேரளத்தில் ரயிலில் போகும்போதே கொரோனா பாஸிட்டிவ்... மருத்துவமனையில் தமிழகப் பயணி
Published on

மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ஒருவர், முடிவுக்காக காத்திருக்காமல் ரயிலில் பயணம் செய்தார். ஊருக்குச் செல்லும் வழியிலேயே பாசிட்டிவ் என தகவல் வந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த 29 வயதுள்ள அந்தப் பயணி, பயணத்தின் இடையிலேயே கொரோனா சோதனை முடிவு வந்ததால், கோழிக்கோடு – திருவனந்தபுரம் ஜன் சதாப்தி ரயிலில் இருந்து பாதியில் இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரை இறக்குவதற்காக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் ரயிலின் வேகத்திற்குச் செயல்பட வேண்டியிருந்தது.  

கோழிக்கோடு மாவட்டம், கண்ணமங்கலத்தில் அவர் ஒப்பந்த தொழிலாளியாக  வேலைபார்த்து வருகிறார். சிறு அறிகுறிகள் தென்பட்டதால், மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனோ பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவு தெரிவதற்குள்  அவரது கர்ப்பிணி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால். சொந்த ஊருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.    

தமிழகத்திற்குச் செல்லும் வழியில் அவரை எர்ணாகுளம் ரயில் ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டனர். கோழிக்கோடு ஸ்டேஷனை தொடர்புகொண்ட அவர்களுக்கு ஏற்கெனவே ரயில் கடந்துவிட்டதாகத் தகவல் வந்தது. பின்னர் திருச்சூர் சுகாதாரத்துறையினருக்கும் தகவல் அளித்துவிட்டு, திருச்சூர் ஸ்டேஷனை தொடர்புகொண்டார்கள். அங்கிருந்தும் ரயில் புறப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது.  கடைசியில் எர்ணாகுளத்தில் இறங்கிய பயணியை அருகிலுள்ள கலாமாசரி மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர்.   

வேறு யாரும் சென்றுவிடாமல் தடுப்பதற்காக அந்தப் பயணி  அமர்ந்திருந்த ரயில் பெட்டி பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணம் செய்தவர்கள் வேறு பெட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் ஜன்சதாப்தி ரயில் பயணத்தைத் தொடர்ந்தது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com