தமிழக, இந்திய அளவில் இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள் யார் யார் தெரியுமா?
1984-85 ஆம் ஆண்டில், தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் நிர்வகித்த துறைகளை அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று அப்போதைய ஆளுநர் குரானா அறிவித்தார். 2011-ம் ஆண்டு கால்நடை அமைச்சரான கருப்பசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அவரது இலாகா மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக கருப்பசாமி நீடித்தார்.
2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் 2015ம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். அவர் வசமிருந்த இந்து சமய அறநிலையத்துறை, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது துறைகளை நிதிஅமைச்சர் ஓபன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் அறிவித்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 166 உட்கூறு 3-ன் படி இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார்.
தமிழகத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் இலாகா இல்லாத அமைச்சராக சிலர் பொறுப்பு வகித்த வரலாறுகளும் உண்டு. 1962ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக டி.டி.கிருஷ்ணமாச்சாரி பொறுப்பேற்றார். இதேபோல நேரு அமைச்சரவையில் 1964 ஜனவரி முதல் ஜூன் முதல் லால் பகதூர் சாஸ்திரி இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். நேரு மறைவுக்குப் பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார்.
2003ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மம்தா பானர்ஜிக்கு நிலக்கரித் துறை ஒதுக்கப்பட்டபோது, அதை அவர் ஏற்காத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன் 2003ம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். அவர் வகித்து வந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறைகள் அருண் ஜெட்லியிடம் கொடுக்கப்பட்டன.
தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முதலில் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.
2005ல் வெளியிடப்பட்ட ஐ.நா.வின் வோல்கர் கமிட்டி அறிக்கையில் இந்தியா-ஈராக் இடையிலான உணவுக்கு எண்ணெய் திட்டத்தால் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் குற்றம்சாட்டப்பட்டார். இதனால் அவரிடமிருந்த வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக அவர் பதவியில் நீடித்தார். டெல்லியில் இரண்டாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தன் வசம் எந்த துறையையும் வைத்துக்கொள்ளவில்லை.