“யாராவது வழியனுப்பவும் துணையிருக்கவுமாக இருந்தால், இந்த வாழ்க்கை எவ்வளவு அடர்த்தியாகிவிடுகிறது”
வண்ணதாசன் எழுதிய இந்த வார்த்தைகளின் அடர்த்தி எவ்வளவு கனமானது என்பதை, இக்கட்டுரையின் முடிவில் நீங்களே அறியக்கூடும்.
தெலங்கானா மாநிலம் கம்மன் நகரைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஹர்ஷவர்தன் (34). எம்பிபிஎஸ் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மருத்துவம் பார்த்த வந்த இவருக்கு, நம் எல்லோரையும் போன்றதொரு நிறைவான பணிநெருக்கடியான சராசரி வாழ்வுதான். படிப்பு, வேலை என தொடர்ந்த ஹர்ஷவர்தனுக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடந்திருக்கிறது.
அப்படி ஹர்ஷவர்தனுக்கு, கம்மன் நகரில் வசித்துவந்த அவரது உறவுக்கார பெண்ணான ஹேமா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அதே மாதம் 29ஆம் தேதி மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்ற ஹர்ஷவர்த்தன், விரைவில் விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின் மனைவியை அழைத்துச் செல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
புதுமாப்பிள்ளையாக, மனைவி இல்லாமல் ஆஸ்திரேலியா சென்ற ஹர்ஷவர்தனுக்கு, ‘மனைவியை எப்படியாவது சீக்கிரம் இங்கே அழைத்துவந்துவிட வேண்டும்’ என்பதே மனதில் அதிகம் ஓடியிருக்கக்கூடும்! ஆனால் விதி அவருக்கு கொடுத்தது, குரூரமான முடிவு.
மார்ச் 2020-ல் ஆஸ்திரேலியா சென்ற ஹர்ஷவர்தனுக்கு, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருநாளில் திடீரென ரத்தவாந்தி ஏற்பட்டிருக்கிறது. ‘மருத்துவர்’ ஹர்ஷ்வர்தனுக்கு, ‘ஏதோ தப்பாயிருக்கே’ என்று புரிந்துள்ளது. விரைந்து மருத்துவப் பரிசோதனை செய்திருக்கிறார்.
அப்போதுதான், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. கூடவே, இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாம் கண்டிப்பாக மரணமடைந்து விடுவோம் என்றும் தெரிந்துள்ளது.
திருமணமாகி 9 நாட்களில் மனைவியை விட்டு பிரிந்த ஹர்ஷவர்தன், விதியின் இப்படியொரு கொடூர விளையாட்டை கனவில்கூட நிச்சயம் நினைத்திருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவராக அவரால் எதார்த்தையும் எடுத்துக்கொள்ளாமலும் இருக்கமுடியவில்லை. ஒருகட்டத்தில் தன்னைதானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட ஹர்ஷவர்தன், தன்னுடைய பெற்றோரை தொடர்பு கொண்டு ‘இதுதான் நடந்தது. இப்போது இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
மகனின் வார்த்தைகளை அவர்களும் முதலில் நம்பவில்லை. பதற்றத்தில் இருந்த அவர்களுக்கு, மகனைக் காணவேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருந்துள்ளது. ‘இந்தியாவுக்கு வந்துவிட்டால் இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்... நீ இங்க வாப்பா’ என்று கூறியிருக்கின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் தரமான சிகிச்சை கிடைக்கிறது என்று பெற்றோரிடம் கூறி இந்தியா வர மறுத்துள்ளார் ஹர்ஷவர்தன்.
இந்தநிலையில் தன்னுடைய மரணம் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்த ஹர்ஷவர்த்தன், அடுத்ததாக செய்த விஷயம்தான், நம்மையும் அதிரவைத்த விஷயம். என்னவெனில், ஹர்ஷவர்தனுக்கு தான் இறந்து விட்டால் தன் மனைவி இளம்வயதிலேயே விதவையாகி அவருடைய மொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்று கவலை ஏற்பட்டதால், மனைவியுடன் பேசி பரஸ்பரமாக விவாகரத்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும்...
தன் மனைவி பொருளாதார ரீதியாக இடையூறுகளை சந்திக்காத வகையில் அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருந்தார் மருத்துவர் ஹர்ஷவர்தன். கூடவே தன்னுடைய உடல்நிலை பற்றி வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த அவர், ‘நான் இறந்தபின் என்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறி அதற்குரிய விமான கட்டணம் முழுவதையும் செலுத்தியுள்ளார்.
இதுதவிர தன்னுடைய உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டி ஒன்றையும் மூன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தயார் செய்திருந்தார். இடையிடையே தனது குடும்பத்தாருடன் வீடியோ கால் மூலம் பேசி பெற்றோர், உறவினர்கள் ஆகியோரை ஆறுதல்படுத்தியும் வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 24 ஆம் தேதி ஹர்ஷவர்த்தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த தன்னுடைய நண்பர்களிடம் ‘நான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்து விடுவேன்’ என்று பேசியுள்ளார். அவர் சொன்னதுபோல, அன்றே ஆஸ்திரேலியாவில் மரணமடைந்து விட்டார் அவர்.
ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் அவருடைய உடல் விமானம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சொந்த ஊரில் இம்மாதம் ஐந்தாம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
மரணத்தை தைரியமாக எதிர்கொண்டது மட்டுமில்லாமல், தன் உடன் இருந்தவர்களையும் கருத்தில் கொண்டு, தான் இல்லாவிட்டால் அவர்கள் உடைந்துபோகக்கூடாது என இருந்த டாக்டர் ஹர்ஷவர்த்தன்... எல்லோரின் அன்பையும் கண்ணீரையும் பெற்று பிரிந்திருக்கிறார்!
மருத்துவர் ஹர்ஷவர்தனை வழியனுப்பவும் துணையிருக்கவுமாக யாரும் இருந்தார்களா என்பதைவிட, அவர் தனக்கானவர்களுக்கு எப்படி துணையாய் இருந்திருக்கிறார் என்பதே, அவருடைய வாழ்க்கையை இன்னும் இன்னும் அடர்த்தியாக்கியுள்ளது!