குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கேரள மாணவி ! வைரலாகும் வீடியோ

குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கேரள மாணவி ! வைரலாகும் வீடியோ
குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கேரள மாணவி ! வைரலாகும் வீடியோ
Published on

கேரளாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் மலாவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருமுறையாவது தேர்வுக்கு தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்ய வேண்டுமென விரும்பியுள்ளார் .அதன்படி தன்னுடைய கடைசி தேர்வை எழுத குதிரையில் புறப்பட்ட கிருஷ்ணாவை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது வைரலாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து நியூஸ் மினிட்டுக்கு பேசியுள்ள கிருஷ்ணா, ''நான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுத வேண்டுமென நான் திட்டமிட்டிருந்தேன். அதற்காகவே என்னுடைய கடைசி தேர்வை தேர்ந்தெடுத்தேன். இது சரியான திட்டமில்லை என பலரும் கூறினார்கள் ஆனால் நான் அவர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. இது எனக்கு புதிதான விஷயமும் இல்லை. கடந்த வருடமும் ஒரு தேர்வுக்கு குதிரையில் தான் சவாரி செய்து பள்ளிக்கு சென்றேன். இன்னும் சில பள்ளி விழாக்களுக்கும் குதிரையில் சென்றிருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

கிருஷ்ணாவின்  தந்தை அங்குள்ள கோவில் ஒன்றில் குருக்களாக பணியாற்றி வருகிறார். அவரது அம்மா குடும்பத்தலைவியாக உள்ளார். கிருஷ்ணாவின் குதிரை சவாரி குறித்து பேசிய அவரின் தந்தை, ''எங்கள் வீட்டில் இரண்டு குதிரை உள்ளது. இரண்டும் நான் பரிசாக கொடுத்தது. ஆனால் இனி குதிரைகள் வாங்கி கொடுக்கப்போவதில்லை. இருக்கும் குதிரைகளை கவனிக்கவே வருமானம் போதவில்லை. குதிரை சவாரியை புகழ்ச்சிக்காக செய்ததாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். புகழ்ச்சிக்காக யாராவது அபாயமான செயலில் ஈடுபடுவார்களா? எனது மகள் கிருஷ்ணாவுக்கு குதிரை சவாரி செய்து கொண்டு தேர்வு எழுதச் செல்ல வேண்டுமென்பது ஆசை. நான் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவள் தைரியசாலி'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போன மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'அந்த மாணவி திறமை‌சாலி என்று புகழ்ந்து ட்விட் செய்துள்ளார். மேலும், பெண் கல்வி குதிரை வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக தகுதியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தி நியூஸ் மினிட் | https://bit.ly/2Kl53eI

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com