மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜூன் மாதத்திற்கான ஊதியம் தாமதம் ஆகும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
நிதிப்பாற்றாகுறை காரணமாக மத்திய அரசில் குருப் ஏ மற்றும் பி பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் தாமதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து அந்த நிதியமைச்சகம் விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையுடன் தொடர்புள்ள ஒரு பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய தாமதம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வரம்புக்குள் செலவினங்களை கட்டுக்குள் வைப்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியானது என்றும் இது தற்காலிகமான ஒன்றே என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்திற்குள் பரிமாறப்படும் இந்த சுற்றறிக்கை ரகசியமானது என்றும் இதை பொது வெளியில் பகிர்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. முன்னதாக மத்திய அரசின் 'ஏ' மற்றும் 'பி' பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் தாமதம் ஆகும் என்று வெளியான தகவலுக்கு தொழிற் சங்கங்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் அரசின் விளக்கம் வெளியாகியுள்ளது.