ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. முதற்கட்ட தகவலின்படி, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தனக்கு கிடைத்த சிக்னலில் ஏற்பட்ட பிரச்னையால் மெயின் லைனில் இருந்து லூப் லைனிற்கு செல்கிறது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது கோரமண்டல் மோதியுள்ளது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் எதிர் திசையில் உள்ள மெயின் ட்ராக்கில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் எதிரே ஹவுரா நோக்கி வந்து கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ், ஏற்கனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது முதற்கட்ட தகவல் மட்டுமே.
இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதுபோல், ரயில் விபத்தில் காயமடைந்து கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மோடி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் துணியால் மூடப்பட்டு, ஓர் இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குளான ரயிலில் பயணித்து காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடி வருகின்றனர். இப்படியான ஒரு சூழலில் வயதான ஒருவர், அங்கிருக்கும் உடல்களின் துணிகளை விலக்கி அழுதபடியே பார்வையிடுறார். இதுகுறித்து அங்கிருப்பவர்கள் விசாரித்ததில் அவர், ’என் மகனை அடையாளம் காணும் நோக்கிலேயே இவ்வாறு செய்கிறேன்’ என அழுதபடி கூறுகிறார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகுவதுடன் காண்போரின் இதயங்களையும் கணக்கச் செய்கிறது. அவரது பெயர் ரவீந்திர ஷாஎனவும் அவருக்கு 53 வயது ஆகிறது எனவும் கூறப்படுகிறது. இவர்தான் தன்னுடைய மகனான கோவிந்த ஷாவைக் காணாமல் தேடுகிறார்.