நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்தும்போது மின்சாரம் கிடைப்பது சாத்தியமில்லை. ஆனால், தனது எளிய முயற்சியால் மின்சாரத்தை உருவாக்கி, டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயி ஒருவர் அதனை சாத்தியமாக்கி இருக்கிறார்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு வாரங்களை தாண்டி போராட்டம் நீடித்து வருவதால் போராட்ட களத்தில் அவர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். அதில் ஒன்று மின்சாதனங்களை சார்ஜ் செய்வது. போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள வைத்திருக்கும் முக்கிய சாதனம் செல்போன்.
அதற்கு அடிப்படை ஆதாரம் மின்சாரம். நெடுஞ்சாலைகளில் போராடும் விவசாயிகளுக்கு மின்சார வசதி கிடைப்பது சாத்தியம் இல்லை. ஆனால் நெடுஞ்சாலையில் மின்சார வசதியை சாத்தியப்படுத்தி இருக்கிறார் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஷா சாந்தர்.
முதலில், அவர் எடுத்து வந்திருந்த டிராக்டரில் உள்ள பேட்டரிகள் மூலமாக மின்சாரம் தயாரித்து செல்போன்களை சார்ஜ் செய்தார். ஆனால் பேட்டரிகள் தொடர்ந்து இயங்க டிராக்டர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம். அதனால் அந்த முயற்சியை கைவிட்ட ஷா சாந்தருக்கு புதிய யோசனை உதித்தது. ஊரிலிருந்து, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகளை வரவழைத்து பரிசோதித்து பார்த்தார்.
அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. தற்போது இவர் பயன்படுத்தியது போக மற்றவர்களுக்கும் மின்சாரத்தை வழங்கி உதவி வருகிறார். 120 சார்ஜர்களை வாங்கிக் கொண்டு வந்து தனது டிராக்டரில் பொருத்திவிட்டு யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளார் ஷா சாந்தர்.
செல்போன்கள் மட்டுமில்லாமல், மின்விளக்குகள், ஸ்பீக்கர்கள், மின்சார அடுப்புகள் என பலவற்றை இதன் மூலம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார் இந்த கில்லாடி விவசாயி. இவரின் இந்த வழிமுறையை பின்பற்றி மேலும் சில டிராக்டர்கள் சோலார் டிராக்டர்களாக மாறி இருப்பதை பார்க்க முடிகிறது.