மகாராஷ்டிராவில் 38 ஆண்டுகளாக போராடியும் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதால் இவ்வாறு செய்தேன் என அமைச்சர் முன்பு தற்கொலைக்கு முயன்றவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வதோடா கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் சுப்ராவ் கராத்தே. இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் கடந்த 15 ஆம் தேதி மல்கபூர் தாலுகாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரசேகர் பவன்குல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதன்பின்னர், விவசாயி ஈஸ்வர் சுப்ராவ் கராத்தே, திடீரென தனது கையில் இருந்த விஷ மருந்தை அமைச்சர் முன்பு உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது உடல்நலம் தேறியுள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வர் கூறுகையில், “என்னுடைய தாத்தா மின்சாரம் வேண்டி 1980 ஆம் ஆண்டு பதிவு செய்தார். ஆனால் இன்னும் எங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. நான் எல்லாவிதமான முயற்சியும் செய்து பார்த்து விட்டேன்.” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து புல்தானா மின்சாரத்துறை அதிகாரி தீபக் தேவடே கூறுகையில், “1980 ல் இணைப்புக்கு விண்ணப்பித்த ஸ்ரீராம் கராத்தே இறந்துவிட்டார், 2006 ல் நாங்கள் ஈஸ்வர் கராத்தேவுக்கு ஒரு கோரிக்கைக் குறிப்பை அனுப்பியிருந்தோம்.
ஆனால் அதற்கான தொகையை செலுத்த அவர் தவறிவிட்டார். உரிய தொகையை அவர் செலுத்தினால் அவருக்கு இணைப்பு வழங்கப்படும்.”எனத் தெரிவித்தார்.