ஆந்திராவில் உள்ள கோயில் ஒன்றுக்கு பக்தர் ஒருவர் 50 தங்க துளசி இலைகளை காணிக்கையாக அளித்தார்.
கோயில்களுக்கு பக்தர்கள் பெரும்பாலும் பணத்தை காணிக்கையாக அளிப்பார்கள். வசதியுடையவர்கள் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக அளிப்பார்கள். அந்த வகையில், தங்கத்தால் ஆன துளசி இலைகளை ஒரு பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வராக லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. ரத்னகிரி மலையில் வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 108 திவ்யங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 1000 படிகளை கொண்ட இந்த மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பல விதமான காணிக்கைகளையும் அளிக்கின்றனர். அந்த வகையில் ஒரு பக்தர் தங்கத்திலான காணிக்கையை வித்தியாசமாக அளித்துள்ளார்.
ஸ்ரீனிவாஸ் ராவ் என்ற அந்த பக்தர் தனது வேண்டுதலின் படி தங்கத்தில் செய்யப்பட்ட 50 துளசி இலைகளை கோயிலுக்கு அளித்துள்ளார். அவர் அளித்த தங்கத் துளசி காணிக்கையை பக்தர்கள் ஆவலுடன் பார்த்துச்சென்றனர். இந்த தங்க துளசி இலைகளின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் ஆகும். கோயிலின் நிர்வாக அலுவலர் இந்த காணிக்கையைப் பெற்றுக் கொண்டு அவருக்காக சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீனிவாஸ் ராவ் இதற்கு முன்பாக இதே வராக லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வெண்கலத்தால் ஆன கருட வாகனத்தை காணிக்கையாக அளித்து இருந்தார்.