அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் அப்சல். 26 வயதான இவர் கோழிக்கோடில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்தவர். கடைசி நேரத்தில் அபராதத் தொகை கட்ட சென்றதால் விமானத்தை தவறவிட்டார்.
இது குறித்து அப்சல் கூறுகையில், ''நான் அபுதாபியில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன். என்னுடை பாஸ்போர்ட் காலமானது ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், நான் ஜூலை 10ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தேன்.
கொரோனா காரணமாக விமான சேவை ரத்தானதால் செல்லமுடியவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 7 அன்று இந்தியா செல்ல டிக்கெட் கிடைத்தது.
ஒரு வருடம் கழித்து எனது சொந்த ஊரான கண்ணூர் செல்வதால் நான் மிகவும் மகிழ்ச்சியுடனும், எதிர்பார்ப்புடனும் இருந்தேன். ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் 1.30 க்கு விமானம் புறப்படும் என கூறப்பட்டது. ஆகையால் ஆகஸ்ட் 6-ம் தேதியே சார்ஜா சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை துபை விமான நிலையம் சென்றேன்.
அங்கு அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு சக பயணிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். விமானத்தில் ஏற செல்லும் போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
விமான நிலையத்தில் அதிக நேரம் தங்கியதால் ரூ. 20,000 அபராதம் கட்டச் சென்னார்கள். ஆனால் என்னிடம் ரூ. 10,000 தான் இருந்தது. எனது அலுவலக நண்பரிடம் வாங்கி அபராதம் செலுத்த மதியம் 1.30 மணி ஆகிவிட்டது. நான் செல்வதற்குள் விமானம் கிளம்பியது.
விமான நிலைய அதிகாரிகளிடம் எனது உடைமைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு எனது அறைக்கு சென்று களைப்பில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த பிறகு தான் விமானம் விபத்துக்குள்ளான செய்தி தெரிந்தது'' என கூறினார்.