உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் மகப்பேறு சிகிச்சைக்கான தொகையை கட்ட முடியாததால் பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை தம்பதியர் விற்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆக்ரா நகரில் சைக்கிள் ரிக்ஷா இழுத்து வரும் சிவ் சரண், கர்ப்பமாக உள்ள தனது மனைவியை சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரது மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறகு சில நாட்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்ற அவரது மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அப்போது அவரிடம் 35000 ரூபாயை சிகிச்சைக்கான கட்டணமாக கேட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். அவரால் அந்த தொகையை செலுத்த முடியாததால் குழந்தையை தங்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விடுமாறு மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது.
அதன்படி தம்பதியர் குழந்தையை விற்று மருத்துவ சிகிச்சைக்கான செலவுபோக 65000 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிந்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு அந்த மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளது.
‘அந்த மருத்துவமனையின் உரிமம் ஐந்து ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்’ என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவ் சரண் மற்றும் அவரது மனைவியின் வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை கடத்தல் தொடர்பாகவும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஆஷா சமூக நலப் பணியாளர்கள் தன் மனைவியை பரிசோதிக்காததால் தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக தெரிவித்துள்ளார் சிவ் சரண்.