நாம் பைக் அல்லது சைக்கிளில் செல்லும் பொழுது சிலவகை வண்டுகள் அல்லது சிறு பூச்சிகள் நமது கண்களுக்கு முன்பாக பறந்து நமக்கு தொல்லையைக் கொடுக்கும். சில பூச்சிகள் கண்களில் விழுந்து எரிச்சலை ஏற்படுத்தும். இப்படி பூச்சிகள் மட்டுமல்ல... நாய்கள், பூனைகள் என்று வீட்டு விலங்குகள் கூட வண்டியின் குறுக்கே பாய்ந்து தொந்தரவை கொடுத்து வரும்.
ஆனால் இங்கோ சற்று வித்தியாசமாய் வண்ணத்துப்பூச்சி ஒன்று பைக்கில் சென்றுக்கொண்டிருந்த இளைஞரின் காதுக்குள் புகுந்து ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா மாநிலம் நீலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்திருக்கிறார். சில அடி தூரம் சென்றதும் அவரின் முகத்துக்கு முன் பட்டாம்பூச்சி ஒன்று தொடர்ந்து பறந்து வந்துள்ளது. பட்டாம்பூச்சிதானே என்று நினைத்த அந்த இளைஞர் அதை பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை... ஆனால் பட்டாம்பூச்சியோ அந்த இளைஞருக்கு பெரிய சம்பவத்தை சர்வ சாதாரணமாக நிகழ்த்தி விட்டது.
ஆம்... அவரின் முகத்திற்கு முன்பாக பறந்துக்கொண்டிருந்த பட்டாம்பூச்சியானது, அவரது ஹெல்மெட்டிற்குள் புகுந்து காதுக்குள் நுழைந்து இருக்கிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் அந்த பட்டாம்பூச்சியை விரட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் பட்டாம்பூச்சியானது வெளியே வரவேயில்லை.
காதுக்குள் புகுந்த பட்டாம்பூச்சி காயத்தை ஏற்படுத்தவே சில நிமிடங்களில் அந்த இளைஞரின் காதிலிருந்து ரத்தமும் வந்துள்ளது. உடனடியாக அந்த இளைஞர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் இளைஞரின் காதிலிருந்த வண்ணத்துப்பூச்சியை உயிருடன் வெளியே எடுத்துள்ளார். அதன் பிறகுதான் அந்த இளைஞருக்கு நிம்மதி பெருமூச்சே வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.