ஏழ்மையில் இருந்து எப்படி நம் குடும்பத்தை தற்காத்துக்கப்போறோம், எப்பாடுப்பட்டாவது ஜெயிச்சுடணும், இவ்ளோ நாள் கஷ்டப்பட்ட அப்பா-அம்மாவ நல்லா பார்த்துக்கணும் என தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், தன் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல கனவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 29 வயது இளைஞரான முகமது காசிம் ஒரு ரோல் மாடலாக மாறியுள்ளார்.
காசிம் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ருக்னுதீன் சராய் என்பவரின் மகனாக மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்கும் வேலை செய்துவந்துள்ளார். மகன் காசிம் தனது ஆரம்ப காலத்திலிருந்து 2012ஆம் ஆண்டுவரை தந்தைக்கு உதவியாக தட்டுகளை கழுவி உதவி செய்வதும், பிரியாணி விற்பதுமாக இருந்துவந்துள்ளார். ஏழ்மையின் பிடியிலும் தனது கனவுக்காக ஓயாமல் உழைத்த அவர் வளர்ந்த பிறகும் கூட குடும்பத்திற்கு உதவிசெய்யும் வகையில் சொந்தமாக ஸ்டால் அமைத்து பிரியாணி வியாபாரம் செய்துள்ளார். இந்த வேலையை செய்துகொண்டே தன்னுடைய கல்வியை நிறுத்தாத காசிம் தற்போது நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று அசத்தியுள்ளார்.
29 வயதான முகமது காசிம், உத்தரப் பிரதேசத்தின் சிவில் சர்வீஸ் (நீதித்துறை) தேர்வில் 135வது ரேங்க் பெற்று தனது குடும்பத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் சேர்த்துள்ளார். உத்தரப் பிரதேச பொது சேவை ஆணையம் நடத்தும் (UPPSC PCS) சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவு தேர்வு 2022-ல் வெற்றிபெற்றுள்ளார். இதன் முடிவுகள் ஆகஸ்ட் 30 அன்று வெளியிடப்பட்டன. முன்னதாக முகமது காசிம் 2019-ல் LLM நுழைவுத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடத்தை பெற்றார். பின்னர் அவர் 2021-ல் UGC NET-க்கும் தகுதி பெற்றார்.
ஏழ்மையின் காரணமாக வேறொரு ஊருக்கு குடிபெயர்ந்த நிலையில் காசிம் வேலை செய்துகொண்டே மாறிமாறி வெவ்வேறான பள்ளியில் படித்துள்ளார். 4ஆம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியில் படித்த அவர், 5 மற்றும் 6 வகுப்பு வேறு பள்ளியிலும், பின்னர் 7 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றொரு பள்ளியிலும் படித்துள்ளார். பகல் முழுவதும் வேலை, இரவில் படிப்பு என இருந்த அவருக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடினமான நேரத்தை கொடுத்தது. 10ஆம் வகுப்பில் ஒரு பாடப்பிரிவில் தோல்வியை சந்தித்த அவர் அதிலிருந்து கடந்துவர நிறைய மெனக்கெடல் செய்ய வேண்டியிருந்தது.
ஏழ்மையிலும் கல்வியை விடாத காசிம், தன்னுடைய பயணத்தில் வெற்றிபெற வேண்டும், இலக்கை நோக்கி ஓட வேண்டும் என்ற முயற்சியில் டியூசன் செல்ல முடிவு செய்து படித்துள்ளார். பின்னர் விடாமுயற்சியோடு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) சேர்ந்தார் மற்றும் BA LLB இல் பட்டம் பெற்றார், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் (DU) LLM தேர்ச்சி பெற்றார்.
தன்னுடைய படிப்பு குறித்து பேசியிருக்கும் காசிம், “நான் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வேன். பிறகு 6 டியூஷன் படிக்க சென்றுவிடுவேன். வேலைக்குச் செல்வதற்கு முன் விடியற் காலையில் படிப்பது, பின்னர் வேலை முடிந்ததும் இரவில் படிப்பது என்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது. நான் பகலில் படித்ததேயில்லை. ஏனென்றால் நான் பகல் முழுவதும் வேலை செய்தேன். 2012 வரை நான் என் குடும்பத்திற்காக பிரியாணி விற்றேன். பிறகு என் அம்மா தான் நீ படிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார். கல்வியின் மூலம் மட்டும் தான் நீங்கள் நினைத்ததைச் செய்யலாம்” என்று யுடியூப் சேன்னல் ஒன்றில் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசியிருக்கும் அவர், “என் அம்மாவுக்கு தான் இந்த வெற்றி சென்று சேர வேண்டும். அவர் தான் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். நான் பள்ளியிலிருந்து இடைநிற்காத வகையில் என்னைப்பார்த்துக்கொண்டவர் அவர் தான். பள்ளி முடித்து கல்லூரிக்கு சென்ற போது ஆங்கிலமும், கணிதமும் என்னை பெரிதும் பயமுறுத்தின. அப்போது என்னுடைய ஆசிரியர்கள் தான் என்னை அதிலிருந்து மீண்டு வருவதற்கு பெரிய உதவியாக இருந்தனர்” என்று பேசியுள்ளார்.
மேலும் “நீங்கள் ஒரு பிரபலத்தின் மகனாகவோ அல்லது அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ இல்லாவிட்டால், நீங்கள் முன்னேறுவதற்கான ஒரே வழி கல்விதான். கல்வியின் மூலமே உங்களால் ஹீரோவாக முடியும். இன்று எனக்கு கிடைக்கும் பாராட்டும், வரவேற்புமே இந்த உண்மைக்கான சாட்சியாகும்” என்று பேசியுள்ளார்.