காரில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி; பரபரப்பில் ஆழ்ந்த கேரளா..20 மணி நேரத்தில் முடிந்த தேடுதல் ஆபரேஷன்!

கேரளத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் 6 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமி
கடத்தப்பட்ட சிறுமிpt web
Published on

கேரளத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பூயப்பள்ளி எனும் இடத்தில் 6 வயது சிறுமி தனது 8 வயது சகோதரருடன் டியூசனுக்கு செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுமி அபிகெய்ல் கடத்தப்பட்ட போது அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது சகோதரை அடையாளம் தெரியாத கும்பல் கீழே தள்ளி குழந்தையுடன் காரில் சென்றுள்ளது. இதன்காரணமாக குழந்தையின் சகோதரருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் சிறுவனையும் கடத்தல்காரர்கள் கடத்த முயன்றனர் என்றும் அவர்களிடம் இருந்து சிறுவன் தப்பித்துவிட்டார் என்றும் இருவிதமாக கூறப்படுகின்றன.

குழந்தையின் சகோதரர் ஜோனதனின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளை நிற காரில் வந்ததாகவும், அதில் 4 பேர் இருந்ததாகவும் அதில் ஒருவர் பெண் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை 4 முதல் 4.30 மணியளவில் இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்தான தகவல்கள் தெரியவந்த உடன் காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பினராயி விஜயனும் மாநிலத்திலுள்ள காவல்துறை உயரதிகாரிகளுக்கு விசாரணையை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தார். மேலும், காவல்துறையினர் குழந்தையை தீவிரமாக தேடி வருவதாகவும், மக்கள் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் கடத்தல்காரர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் ரூ.5 லட்சம் பணம் அளித்தால் குழந்தையை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களில் மீண்டும் அழைப்பு வந்ததாகவும், அதில் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும், புதன்கிழமை காலைக்குள் 10 லட்சம் பணம் அளித்தால் குழந்தையை ஒப்படைப்பதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. தொலைப்பேசியில் பேசியவர் பெண் என்றும் கூறப்படுகிறது.

முதலில் வந்த அழைப்பை காவல்துறையினர் ட்ராக் செய்தனர். அந்த அழைப்பு கொல்லத்தில் உள்ள பாரிப்பள்ளியில் ஒரு கடையில் இருந்து அழைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக கேரளத்தில் உள்ள மனோரமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினர் தொடர்ச்சியாக பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை சோதனை செய்தனர். இந்நிலையில் கடத்தப்பட்டிருந்த குழந்தை நகரத்தில் உள்ள ஆசிரமத்தின் மைதானம் ஒன்றில் இருந்து சுமார் 20 மணி நேரத்திற்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் கடத்தல்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com