மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது ராஜ்கர்க் ( Rajgarh ) என்ற கிராமம். சுமார் 400 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை. இதற்கு இவர்கள் கூறும் காரணம் சற்று வித்தியாசமானது. கடவுள் வழிபாடு பொதுவாக நமது நலனுக்காகவும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு கடவுளின் கோபத்தின் காரணமாக இங்கு பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
அப்படி கடவுளுக்கு என்ன தான் கோபம். இந்த கிராம மக்கள் ஏன் இவ்வாறு அச்சப்படுகின்றனர். இந்த கதை நமக்கு தெரியவேண்டுமென்றால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து கிராம மக்கள் ஒருவர் கூறுகையில், 16ஆம் நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடைப்பெற்றுள்ளது. அப்போது கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கோதுமை அரைத்தாராம். இதன்காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண்ணின் செயலால் கோபமடைந்த தெய்வம் கிராமத்திற்கு சாபம் விட்டது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு கிராமத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் தங்கவில்லை. ஒன்று இறந்து பிறக்கும் இல்லையென்றால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்துள்ளது. அதன் பின்னரே கடவுளின் சாபம் குறித்த விவரம் அறிந்த கிராமத்தினர் அன்று முதல் இன்று வரை இங்கு பிரசவம் பார்ப்பதில்லை என்கின்றனர்.
மேற்கண்டவை குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. தங்கள் முன்னோர்கள் கூறியதை கிராம மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு 90 சதவீதம் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. மிகவும் சிரமமான நிலையில் பெண்களுக்கு கட்டாயம் பிரசவம் பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காக கிராமத்திற்கு வெளியில் ஒரு கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். அங்கு தான் அவசர காலங்களில் பிரசவம் பார்க்கப்படுகிறது.
அவசர காலங்களில் கிராமத்தில் நடைப்பெற்ற பிரசவத்தில் ஒன்று குழந்தை இறந்துள்ளது. இல்லையென்றால் தாய்க்கு மரணம் நிகழ்ந்துள்ளது. இதன்காரணமாகவே கிராம எல்லைக்கு அப்பால் கட்டிடத்தை எழுப்பியதாக ஒரு வயதானவர் தெரிவித்தார்.