பஞ்சாப்பில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஏழைகளுக்கு இலவசமாக முகக் கவசங்களைத் தைத்துக்கொடுத்து வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி குருதேவ் கவுர் தாலிவால். இவர் தினமும் காலையில் எழுந்தவுடன் பிரார்த்தனைகளை முடித்த பின்னர் 8 மணிக்குத் தையல் இயந்திரத்தில் அமர்கிறார். மாலை 4 மணி வரை முகக் கவசங்களைத் தைக்கும் இவர், அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார்.
கொரோனாவை தடுக்க முதல் பாதுகாப்பு உபகரணமாகக் கருதப்படுவது முகக் கவசங்கள் தான். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. அதிலும் ஊரடங்கால் உணவு கூட வாங்க முடியாத ஏழைகள், கொரோனா நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் முகக்கவசங்களை வாங்கச் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் இந்த 98 வயது மூதாட்டி தனது உழைப்பால் முகக் கவசங்களை தைத்து வாழும் தேவதையாக மாறியுள்ளார்.