உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்றால் அது நமது மக்களவைத் தேர்தல்தான். இந்த முறை மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 96 கோடியாகும். உலகின் பெரும்பாலான நாடுகளிலே மொத்த ஜனத்தொகை கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையாக இல்லை.
ஜனத்தொகையிலே இந்தியாவுடன் ஒப்பிடக்கூடிய இடத்தில் உள்ள சீனாவில் ஜனநாயக நடைமுறை பின்பற்றப்படவில்லை என்கிற சூழலில், நமது மக்களவைத் தேர்தல் உலகில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை பயன்படுத்தும் தேர்தலாக உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்த போது, 91 கோடி வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இந்தியாவின் ஜனத்தொகை தற்போது 140 கோடியாக உள்ளது என்பதும் சமீபத்தில் சீனாவை கடந்து உலகின் அதிக ஜனத்தொகை உள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதும் நாம் அறிந்ததே. தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 96 கோடியாக உள்ள நிலையில், மக்களவை தேர்தலை நடத்த இந்த முறை 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதாவது முதல் கட்ட வாக்குப்பதிவு மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இரண்டுக்கும் இடையே நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது என அவர்கள் விளக்கினர்.
இவ்வளவு விரிவாக தேர்தலை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி அரசு அதிகாரிகள் தேர்தல் பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். வாக்கு சாவடிகளை முறையாக அமைத்து பராமரிப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்து தயார் நிலையில் வைப்பது, மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என பல்வேறு பணிகளை செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
காஷ்மீர், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பதட்டமான பகுதிகள் அதிகம் உள்ளதால், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதி என பலமுறை பயணம் செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையில் அதிகம் ஆர்வம் காட்டாத நிலையில், இந்த முறை குறைந்தது 65 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 30 கோடி நபர்கள் தங்களுடைய வாக்கு உரிமையை பயன்படுத்தாமல், ஜனநாயக கடமையை மறந்து தேர்தல் நாளை விடுமுறை நாளாக கருதி விடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 67 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.
இந்தியாவில் உள்ள 96 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 49 கோடி ஆண்கள் மற்றும் 46 கோடி பெண்கள். முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.