வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அந்த பகுதி முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. அந்த பகுதிக்கு செல்லும் பாலமும் அடித்துச் செல்லப்பட்டதால், பல சிக்கல்கள், சவால்களை கடந்து இந்திய ராணுவம் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பாலங்கள் இடிந்துள்ளதால், பல்வேறு பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு காட்சி அளிக்கின்றன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீரட்டில் இருந்து நிபுணத்துவம் பெற்ற மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலங்களை கட்டுவதிலும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக விமானம் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட 65 உயிரிழப்புகளைத் தாண்டி, 16 பேரின் சடலங்கள் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலரது உடல் உறுப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 250க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலர் கல்பட்டா, வைத்திரி, மேப்பாடி, மானந்தவாடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் அதிகமான குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியிருக்கும் குடும்பத்தினரில் பலர் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரல்மலா பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தை புதிய தலைமுறை ட்ரோன் காட்சிகள் மூலம் பதிவு செய்துள்ளது. கேரள அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு,
என்ற உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது மிகமோசமான நிலச்சரிவாக பார்க்கப்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கேரள அமைச்சர் ராஜேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். செவ்வாய் மற்றும் புதன்கிழமை துக்கநாளாக அனுசரிக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கேரளாவிற்கு நிவராணப் பணிகளுக்காக தமிழகம் சார்பில் ரூ.5 கோடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மீட்புப் பணிகளுக்கு உதவ 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனனுடன் தொலைபேசியில் பேசிய அவர், தமிழ்நாடு சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் “வயநாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மீட்புப்பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு இப்போது ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 93 பேர் உயிரிழப்பு; 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென்று பொழிந்த அதிகனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை தரப்படுகிறது. வயநாட்டில் 45 உள்பட மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை இணைந்து பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.