”இந்தியாவில் தகுதி தேர்வில் தோற்றவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்”-மத்திய அமைச்சர்
இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்கள் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, " வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான். மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று விவாதிக்க இது சரியான நேரம் அல்ல.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர் என்பது போன்ற வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்வதற்காக உக்ரைனில் உள்ள தூதரகத்தில் இந்தியா கூடுதல் பணியாளர்களை நியமித்துள்ளது." என கருத்து தெரிவித்துள்ளார்
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்திவரும் சூழலில், அந்த நாட்டில் மருத்துவம் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலமாக தாயகம் திரும்பியுள்ளனர்.