உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
துபாயில் வசிக்கும் இந்தியத் தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு பிறந்தவர் ரேயான்ஷ் சுரானி. 9 வயது சிறுவனான இவர், தனது 4 வயது முதலாகவே யோகா கற்று வருகிறார். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக யோகா செய்து வந்த சுரானி, ஒருகட்டத்தில் அனைத்து ஆசனங்களையும் கற்று தேர்ந்தார். அதன் பிறகு, வீட்டில் தினமும் காலை யோகாசனங்களை செய்து வந்த அவருக்கு, நாம் ஏன் மற்றவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க கூடாது என்கின்ற எண்ணம் வந்துள்ளது. ஆனால், அவ்வாறு யோகா கற்றுக் கொடுக்க வேண்டுமெனில், அதற்கென பிரத்யேக பயிற்சிகளை பெற வேண்டியது அவசியம். அதுபோன்ற யோகா மையம் துபாயில் இல்லாததால், சுரானியின் பெற்றோர் அவரை இந்தியாவின் உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்குள்ள பிரபலமான யோகா மையத்தில் இணைந்து யோகா ஆசிரியராக மாறுவதற்கான பயிற்சிகளை சுரானி கற்று வந்தார். இவ்வாறு 200 மணிநேர பயிற்சிக்கு பிறகு, சிறுவன் சுரானிக்கு யோகா ஆசிரியர் பட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டது. உலகிலேயே 9 வயதில் யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற முதல் சிறுவன் ரேயான்ஷ் சுரானி ஆவார். இதுகுறித்து தகவலறிந்த கின்னஸ் புத்தக நிர்வாகிகள், அவரை தொடர்புகொண்டு அவரது சான்றிதழ்களை உறுதி செய்தனர். இதையடுத்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியராக ரேயான்ஷ் சுரானியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சிறுவன் சுரானி கூறுகையில், "எனது யோகா ஆர்வத்துக்கு எனது பெற்றோர் தான் காரணம். அவர்கள் தினமும் யோகா செய்வதை பார்த்தே எனக்கும் அந்தக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. யோக பயிற்சிகளை செய்ய செய்ய, அதில் இருந்த உன்னதமான விஷயங்கள் எனக்கு தெரியவந்தது. யோகா செய்வதை போலவே அதை கற்றுக்கொடுப்பதிலும் எனக்கு ஆசை இருந்தது. அதனால் ரிஷிகேஸுக்கு சென்று யோகா ஆசிரியர் பட்டம் பெற்றேன். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதால் மிகவும் பிரபலமாக மாறியிருப்பதாக உணர்கிறேன். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" என அவர் கூறினார்.