மத்திய குற்றப்பிரிவு மற்றும் மங்களூரு போலீசாரின் முயற்சியின்கீழ் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 9 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷ்னர் சஷிகுமார் கூறுகையில், “இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான நீல் கிஷோரிலால் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீல் கிஷோரிலால் மணிப்பாலிலுள்ள கஸ்தூர்பா மருத்துவ கல்லூரியில் 2006-2007ஆம் ஆண்டு பிடிஎஸ் படித்துள்ளார். இவர்தான் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலில் முக்கிய குற்றவாளி ஆவார்.
அதே கல்லூரியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதலில் நீல் கிஷோரிலாலை போதைப்பொருளுடன் கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 50,000 மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருள், செல்போன்கள் மற்றும் ரூ.7,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒரு போலி துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்காவது பிடிபட்டால் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தற்காப்பிற்காக போலி துப்பாக்கியை வைத்திருந்ததாக நீல் ஒப்புக்கொண்டார்.
நீல் பிரிட்டன் குடிமகனாக இருந்தபோதிலும், மங்களூருவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்துவருகிறார். பல் மருத்துவ கல்லூரியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்துள்ளார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் கடத்தியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. விசாரணையின்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் 22-32 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.