இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மலையில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையில் கோயில் இடிந்து விழுந்துவிட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளர்.
மேலும் சிலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் நேரில் சென்று மீட்பு பணியை முடுக்கிவிட்டுள்ளார். இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவத்தின்போது கோயிலில் சுமார் 50 பேர் வரை இருந்துள்ளனர். அம்மாநிலத்தில் நேற்று காலை முதல் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்வர் சுக்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சிம்லா போல, ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையால் அங்கு 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை காணவில்லையென சொல்லப்படுகிறது. இதனிடையே தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி (இன்று) வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இடைவிடாமல் பெய்யும் கனமழையால் இமாச்சலப் பிரதேச மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இமாச்சலில் கனமழை முடியுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.