89 வயதில் ஜெர்மனுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் லதிகா பாட்டி

89 வயதில் ஜெர்மனுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் லதிகா பாட்டி
89 வயதில் ஜெர்மனுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் லதிகா பாட்டி
Published on

89 வயதில் பாரம்பரிய கைப்பைகளை (potli bags) உற்பத்தி செய்து வெளிநாடுகள் வரை விற்பனை செய்து அசத்துகிறார் இந்த லதிகா பாட்டி.

இளம் வயதில் வேலை கிடைக்கவில்லை என்றார்கள் இளைஞர்கள். ‘இந்த நாடு எனக்கு என்ன செய்தது?’என்றார்கள் பல வாலிபர்கள். ஆனால் 89 வயதில் முழுகெலும்பு உடைய உழைத்து வருகிறார் லதிகா பாட்டி. அவருக்கு பணம் ஒரு தேவையில்லை. ஆனால் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஓய்வை விரும்பும் காலத்தில் உழைப்பை விரும்புகிறார் இந்த மூதாட்டி. வயது அவரை தளர்த்தி இருக்கலாம். ஆனால் வைராக்கியம் அவரை உயர்த்தி நிறுத்தி இருக்கிறது. 

அசாமில் உள்ள துப்ரி மாவட்டத்தில் பிறந்தவர் இந்த லதிகா சக்கரவர்த்தி. இவருக்கு தற்போது 89 வயதாகிறது. இந்தியாவை ஆய்வு செய்யும் அதிகாரி ஒருவரை திருமணம் செய்துகொண்டதால், நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்துள்ளார். இதனால் பல்வேறு கலச்சாரங்களையும் நன்கு அறிந்துள்ளார். இவரது கணவர் இறந்த பின்னர், இறுதி காலத்தில் பொழுதுபோக்காகவும், அவரது குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகளுக்காகவும் தையல் பழகியுள்ளார். அதன்மூலம் சிறு பொம்மைகள், சிறுசிறு கைப்பைகளை அவர் தைத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து பாரம்பரிய கைப்பைகளை இவரே வடிவமைத்து உற்பத்தி செய்துள்ளார். அவரது கைவண்ணத்தில் செய்த பைகளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதைக்கண்ட சிலர் தங்களுக்கு அதுபோன்று செய்து தருமாறு கூற, தனது வியாபாரத்தை சிறியதாக தொடங்கியுள்ளார். பலரும் தாங்கள் வாங்கும் புதிய ஆடைக்கு பொருத்தமான சிறிய ரக கைப்பைகளை, லதிகா பாட்டியிடம் ஆர்டர் கொடுத்து செய்துள்ளனர். அவர்களை அந்தக் கைப்பை வெகுவாக கவர்ந்துள்ளது. தான் தயாரித்த கைப்பைகளை, ஜெர்மனியில் உள்ள தனது பேரனுக்கு படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதைக்கண்ட லதிகா பாட்டியின் பேரன் ஜாய் சக்ரவர்த்தி, அதைக்கொண்டு இணையதளம் ஆரம்பித்து விற்பனையை தொடங்க நினைத்துள்ளார்.

அவர் சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனே “லதிகா’ஸ் பேக்ஸ்” என்ற இணையதளத்தை தொடங்கிவிட்டார். அதில் தனது பாட்டி தயாரித்த கைப்பைகளை படம் பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார். அவற்றிற்கு ரூ.500 லிருந்து ரூ.1,500 வரை விலை நிர்ணயித்துள்ளார். அதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லதிகா பாட்டி தயாரித்த பைகளுக்கு, ஜெர்மனி, நியூலாந்து மற்றும் ஓமனில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. அந்நாடுகளுக்கு லதிகா பைகள் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர். 400க்கும் மேற்பட்ட பைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

தனது வெற்றியின் ரகசியம் குறித்து கூறும் லதிகா பாட்டி, “நான் ஒரு நேர்மையான வாழ்வை வாழ்ந்துள்ளேன். அதனால் உடல் நலத்துடனும், நிம்மதியுடனும் இருக்கிறேன். சீக்கிரம் தூங்கினால், சீக்கிரம் எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எந்த நல்ல செயலையும் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. உங்கள் கையில் என்ன வேலை கிடைக்கிறதோ, அதை சிறப்பாக செய்யுங்கள். அது உங்களுக்கு நிம்மதியான மனநிலையை கொடுக்கும்” என்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com