வங்கி லாக்கர் அறையில் சிக்கித் தவித்த 89 வயது முதியவர் - போராடி மீட்ட போலீஸ்!

வங்கி லாக்கர் அறையில் சிக்கித் தவித்த 89 வயது முதியவர் - போராடி மீட்ட போலீஸ்!
வங்கி லாக்கர் அறையில் சிக்கித் தவித்த 89 வயது முதியவர் - போராடி மீட்ட போலீஸ்!
Published on

ஹைதராபாத்தில் வங்கி ஊழியரின் அலட்சியத்தால் 18 மணி நேரம் வங்கி லாக்கர் அறையில் 89 வயது முதியவர் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் சாலை எண் 67 இல் வசித்து வருபவர் கிருஷ்ணா ரெட்டி. இவர் 89 வயதான நீரிழிவு நோயாளி. மார்ச் 28 திங்கள் அன்று மாலை 4.20 மணியளவில் தன் வீட்டிற்கு அருகில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குச் சென்று தனது வங்கி லாக்கரைத் திறந்துள்ளார். அவர் லாக்கர் அறைக்குள் இருந்தபோது அதைக் கவனிக்காத வங்கி ஊழியர்கள், முதியவரை உள்ளேயே விட்டுவிட்டு லாக்கர் அறையை பூட்டினர். மாலை வெகுநேரமாகியும் கிருஷ்ணா ரெட்டி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் ஜூப்ளி ஹில்ஸ் போலீசை அணுகினர்.

ஜூப்ளி ஹில்ஸ் செக்போஸ்ட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கடைசியாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சென்றதும் அங்கிருந்து அவர் வெளியே வரவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக வங்கிக்கு சென்ற போலீசார் லாக்கர் அறையை திறந்து அவரை வெளியே கொண்டு வந்தனர். நீரிழிவு நோயாளியான முதியவர் லாக்கர் அறையில் இரவு முழுவதும் பல சிரமங்களை சந்தித்துள்ளார். மேலும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா ரெட்டி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“ஜூப்ளி ஹில்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் முதியவரை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளோம். நேற்று மாலை அவர் லாக்கர் அறையில் தற்செயலாக அடைக்கப்பட்டார். சிசிடிவி கேமராக்களை சரிபார்த்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் அவரை வெற்றிகரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்" என்று ஜூப்ளி ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ரெட்டி ட்வீட் செய்துள்ளார். வங்கி ஊழியரின் சிறு அலட்சியத்தால் 18 மணி நேரம் வங்கி லாக்கர் அறையில் 89 வயது முதியவர் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com