உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறமிருக்க, மறுபுறம் நிரந்தர வேலையினால் மிகுந்த மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதாவது, பெரும்பாலான ஊழியர்கள், தமது பணி நேரம் முடிந்த பிறகும் நிறுவனத்திடமோ அல்லது மேலதிகாரிகளிடமோ அலுவலகரீதியாக தொடர்பில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அதாவது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பணியாளர்களின் விடுமுறையின்போதும் இதுபோன்ற ஆலோசனைகளைச் சில நிறுவனங்கள் பெறுகின்றன. இதனால், பணியாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதைக் கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.
இந்த நிலையில், Indeed என்ற வேலை தேடலுக்கான இணையதளம் நடத்திய சமீபத்திய ஆய்வில், 88% பேர் வேலைநேரத்திற்குப் பின்னரும் அவர்களுடைய முதலாளிகளால் தொடர்புகொள்ளப்படுவதாகவும், Sick leave அல்லது பொது விடுமுறை நாட்களில்கூட, 85% ஊழியர்கள் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளதாகவும், அது தங்களின் மனநிலையை பாதிப்பதாகவும் அதன் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நமது வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே தெளிவான எல்லையை வைத்திருப்பது எவ்வளவு கடினமானது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அதேநேரத்தில், பணிநேரம் முடிந்தததும் அலுவலகத்துடனான தொடர்பைத் துண்டிப்பதை நல்ல முன்னெடுப்பாக நினைப்பதாக 79% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வேலை வழங்குபவர்கள் எதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
81% பேர் வேலை-வாழ்க்கை எல்லைகளை மதிக்காவிட்டால் சிறந்த திறமைகளை இழக்க நேரிடும் என்று அஞ்சுவதாகக் கூறியுள்ளனர். ஆனால் அவசர திட்ட காலக்கெடுவுடன், பல மணிநேரங்களுக்குப் பிறகு ஊழியர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன. அதாவது, வேலைநேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்புகொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது. அதில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.