"சிறப்பாக உணருகிறேன்" - 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்

"சிறப்பாக உணருகிறேன்" - 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்
"சிறப்பாக உணருகிறேன்" - 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்
Published on

84 வயது முதியவர் ஒருவர், 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகக் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஆரை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமதேவ் மண்டல். 84 வயதான இவர், இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். தற்போது கொரோனா பரவலைத் தடுக்க ஒரே ஆயுதமாக கருதப்படும் கொரோனா தடுப்பூசியை, பெரும்பாலும் 2 டோஸ்களுடன் பூஸ்டர் டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுவரும் நிலையில், இந்த முதியவர் 12-வது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றபோது சுகாதாரத்துறை ஊழியர்களிடம் பிடிபட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், மார்ச் 13-ம் தேதி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதாக முதியவர் பிரமதேவ் மண்டல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, மே 19, ஜூன் 16, ஜூலை 24, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 11, செப்டம்பர் 22, செப்டம்பர் 24, அதற்கு அடுத்து 10-வதாக ஒரு தடுப்பூசி, கடைசியாக கடந்த டிசம்பர் 30-ம் தேதி என்று, கடந்த 10 மாதங்களில் வெவ்வேறு இடங்களில் முதியவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதற்காக தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பயன்படுத்தியதுடன், வெவ்வேறு தருணங்களில் மனைவி, உறவினர்களின் தொலைப்பேசி எண்களை, முதியவர் பிரமதேவ் மண்டல் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், பிரமதேவ் மண்டல் 12-வது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனது கிராமத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, அவரது ஆவணங்களை சோதித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், முதியவர் பிரமதேவ் மண்டல், ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்தியதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் இதுகுறித்து முதியவரிடம் கேட்டபோது, தான் ஏற்கெனவே 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், இது தனக்கு 12-வது தடுப்பூசி எனவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். மேலும் ஒவ்வொரு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தும்போதும் முழங்கால் வலி குறைந்து ‘சிறப்பாக உணருகிறேன்’ என்று முதியவர் பிரமதேவ் மண்டல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்து, பிரமதேவ் மண்டல் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியது உண்மையதானா என கண்டறிவதற்காக, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், முதியவர் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டது உண்மை என்று கண்டறியப்பட்டால், முதியவர் மீதும், அவருக்கு தடுப்பூசி செலுத்திய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com