தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்ததும் வீட்டில் இருந்த வயது முதிர்ந்த தாயை வயக்காட்டு பகுதியில் டென்ட் அமைத்து தனித்து விட்டுள்ளனர் கல் நெஞ்சம் கொண்ட மகன்கள்.
அந்த மாநிலத்தில் உள்ள வேளேறு மண்டலத்தில் உள்ள பீச்சரா கிராமத்தை சேர்ந்தவர் 82 வயதான லச்சம்மா. அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகன் மட்டும் இறந்துவிட்டார். லச்சம்மா தனது மூன்றாவது மகனோடு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததும் வீட்டை வீட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயக்காட்டில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தனது தாயை தங்கவைத்ததுள்ளார் அவரது மூன்றாவது மகன்.
இது குறித்து போலீசார் விசாரித்ததில் தங்கள் வீட்டில் போதுமான இட வசதி இல்லாததால் இப்படி செய்ததாக தெரிவித்துள்ளார் லச்சம்மாவின் மூன்றாவது மகன்.
‘எனது மகன்களில் ஒருவருக்கு இரண்டு வீடு இருந்தும் என்னை கூட்டி செல்ல மறுத்துவிட்டான்’ என தெரிவித்துள்ளார் லச்சம்மா. அதன்பிறகு மகன்கள் மற்றும் மகளை அழைத்து அரசு அதிகாரிகள் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாவது மகனின் வீட்டிற்கு தற்போது லச்சம்மா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.