போதிய உள்கட்டமைப்பு வசிதகள், மாணவர்கள் சேர்க்கை இல்லாத 800 பொறியியல் கல்லூரிகளை மூடவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்து நாடு முழுவதும் வகுப்புகள் தொடங்கிவிட்டன. கலந்தாய்வுகள் முடிவில் அதிகப்படியாக இடங்கள் நிரம்பாமல் பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட விரும்புவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சேர்மன் அனில் தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை சரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விதிமுறைகளை பின்பற்ற முடியாமல் ஆண்டுதோறும் சுமார் 150 கல்லூரிகள் மூடப்படுகிறது. தொழில்நுட்ப கவுன்சிலின் இணையதளத்தில் உள்ள தகவலின் படி 2014-15 முதல் 2017-18 கல்வி ஆண்டு வரை சுமார் 410 கல்லூரிகளை மூட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில், தெலுங்கானா மற்றும் மகாஷ்டிரா மாநிலங்களில் அதிகப்படியாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.