இந்திய வம்சாவளியை சேர்ந்த முதிய தம்பதியொருவர், நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் மும்பை வந்துள்ளனர். விமான நிலையத்தின் immigration பகுதிவரை செல்வதற்கு இவர்கள் இருவருக்கும் 2 சக்கரநாற்காலிகள் தேவைப்பட்டுள்ளன. ஆனால் ஒரு நாற்காலி மட்டுமே இருந்துள்ளது. இருவருக்குமே சக்கர நாற்காலி தேவையென அவர்கள் முன்பதிவு செய்திருந்தபோதும், ஒன்றுமட்டுமே கிடைத்துள்ளது.
இதனால் சுமார் 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர், கிடைத்த அந்த ஒரு சக்கர நாற்காலியில் தனது மனைவியை அமர வைத்துவிட்டு, அவருடன் சேர்ந்து விமான நுழைவு வாயில் வரை சுமார் 1.5 கிமீ தூரத்துக்கு நடந்தே சென்றுள்ளார்.
இறுதியில் நுழைவு வாயிலில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் அவர். உடனடியாக அங்கிருந்தோர் விமான நிலைய மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் பயணித்த ஏஐ 116 விமானத்தில் மொத்தம் 33 சக்கர நாற்காலி தேவைப்படும் பயணிகள் இருந்துள்ளனர். ஆனால் 15 சக்கர நாற்காலிகள் மட்டுமே விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்ததாக விமான நிலைய பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவிக்கையில், “சக்கர நாற்காலியின் தேவை அதிகமாக இருப்பதால், சற்று அந்த தம்பதியை காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் தனது மனையுடன் நடந்து செல்ல முடிவு செய்து அங்கிருந்து சென்று விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
சக்கர நாற்காலி இல்லாமல் முதியவர் எதிர்ப்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.