கொரோனா பேரிடரில் இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு எத்தகையது?- EY கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்திய அரசு கோவிட் 19 பேரிடரைக் கையாளும் விஷயத்தில் டிஜிட்டல் ரீதியாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என்று நம்புவதாக 80 சதவிகித இந்திய மக்கள் கருதுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல சர்வே நிறுவனமான EY-ன் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
இந்தியர்கள் மொபைல் போன்களை சராசரிக்கும் அதிகமாகவே உபயோகப்படுத்துவதாக EY Connected Citizen Survey என்னும் இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. “நேரடியாக ஒருவரை சந்திப்பதை விடவும், தொழில்நுட்ப வகையில் சந்திப்பதை இந்தியர்கள் சௌகரியமாக கருதுகின்றனர். இப்போதை சூழலில், அரசு அனைத்து சேவைகளையும் இணையவழி செய்ய வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஓய்வூதிய திட்டங்கள், சுயதொழிலை மேம்படுத்தும் வழிகள் போன்றவற்றை இணையவழியாக்க வேண்டுமென விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் ஒரு சிலருக்கு இணைய வழி சேவை கிடைக்காமல் இருப்பதால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்வகையில் அரசு இணைய சேவையை விரிவுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத் வேண்டும் என்றும், இந்த இணைய சேவைகள் வழியாக, அரசு தனது கொள்கை உருவாக்கும் பணியில் மக்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, பொதுமுடக்கம் பரவலாக நாடு முழுவதும் அமலில் இருந்து வருவதால், இணையம் வழியாக மட்டுமே அரசு ஏழை, எளியோரையும் அணுக முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தரவுகளின் தனியுரிமைப் பாதுகாத்தலில் இந்தியாவில் கூடுதல் சிக்கல் இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர் என்று தெரிகிறது. இதுபற்றிய குறிப்பில், “63% இந்தியர்கள், தங்களின் தனிப்பட்ட விவரங்களை அளிக்க எவ்வித மனத்தடையுமின்றி இருக்கின்றனர். 34% பேர் அசௌகரியமாக அதை நினைக்கின்றனர்.
இதேபோல, 57% பேர் தங்களுக்கான பணப்பரிவர்த்தனைக்காக தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக தகவல் பகிர்வதையும், அவர்களிலும் 48% பேர்தான் அதை இணைய வழியாக பகிர்வதையும் விருப்பம் தெரிவிக்கின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடுகள், மக்களின் இணைய சேவை மீதான ஆர்வம் குறித்து இந்த கருத்துக்கணிப்பு மேற்கொண்ட குழுவின் தலைவரான கௌரவ் தனிஜா கூறும்போது, “இணைய வழி சேவைகளென்பது, நம்மை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லக்கூடியது. இது புதியதொரு வழிமுறை. இந்திய அரசு அந்த புதிய வழிமுறையின் முக்கியத்துவத்தை விரைந்து கற்றுக்கொண்டு, செயல்படுத்திவிட்டது. குறிப்பாக இந்த ஊரடங்கு நேரத்தில், பாதுகாப்பாகவும் விரைவாகவும் இணைய வழி சேவைகளை தன் மக்களிடம் அரசு கொண்டு சேர்த்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் 53% சதவிகித மக்கள், அன்றாடம் ஒருமுறையாவது இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதிலும் 38% பேர் தங்களின் சொந்த தேவைக்காக மட்டுமே இணையத்தை முழுவதுமாக பயன்படுத்துகின்றனர். இப்படியானவர்கள் பயன்படுத்தும்போது, 78% பேர் சமூக வலைதளங்களையும், 75% இணைய வழியாக பொருள்கள் வாங்கவும், 74% பேர் திரைப்படங்கள் பார்ப்பது – பாடல்கள் கேட்பது போன்றவற்றுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.
வருங்காலத்தில், வங்கிகளின் சேவைகளும் – பொருள்கள் வாங்குதல் விற்பனை சேவைகளும் இணைய வழியாகவே நடக்குமென 81% பேர் நம்புகின்றனர் என்றும், 80% பேர் தங்களின் கல்வியின் போக்கை மாற்றியமைக்கும் என்றும், 79% பேர் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளைக்கூட இணையமே நிர்ணயிக்கும் என்றும் நம்புவதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: Mint