வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு கல் போன்று மாறி வருகிறான்.
வங்கதேசத்தைச் சேர்ந்த மெஹந்தி ஹாசன் (8) அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவன் தோல் தடித்த செதில் போன்றும், மணல்களில் இருக்கும் கற்களை போன்றும் மாறி வருகிறது.
இது குறித்து சிறுவனின் தாயார் ஜஹான்காரா பேகம் கூறுகையில், இந்த நோயினால் மெஹந்தி அதிக வலியால் துடித்து வருவதாக கூறினார். பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனை மற்ற குழந்தைகள் நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிறந்து 12 நாட்களிலேயே அவனுக்கு இந்த நோய் வந்ததாகவும் இதனால் ஊரில் உள்ள யாருக்கும் தன் மகனை பிடிக்காது என்றும் தன் மகன் முன்னால் சாப்பிடக் கூடாது என்று மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுவதாகவும் ஜஹான்காரா பேகம் கூறினார்.
தனது கணவர் ஒரு வேன் டிரைவர் என்றும் தங்கள் அன்றாட வாழ்விற்கே அவருடைய சம்பாத்தியம் சரியாகி விடுவதால் மெஹந்திக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.