டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி பத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் பல சிக்கல்கள் ஏற்பட்டு ஒருவர்பின் ஒருவராக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12.15 மணிக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் முழுவதும் தீர்ந்துவிட்டதாகவும், அடுத்து அங்கு ஆக்சிஜன் வந்துசேர கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆனதால் அதற்குள் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.