ஹரியானாவில் இரண்டு மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள விராட் மருத்துவமனையில் நான்கு பேரும், குருகிராமில் உள்ள கதுரியா மருத்துவமனையில் நான்குபேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பற்றி பேசிய விராட் மருத்துவமனையின் ஊழியர், ஐ.சி.யுவில் மூன்று நோயாளிகளும் பொது வார்டில் ஒருவரும் இறந்துவிட்டதாகக் கூறினார். பலமுறை கோரிக்கைகள் வைத்தபோதிலும் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் “எங்கள் மருத்துவமனையில் 114 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இது நகரத்தில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். எங்களுக்கு தினசரி 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன ”என்றார்.
விராட் மருத்துவமனையில் அவசர ஆக்ஸிஜன் தேவை குறித்து தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சண்டிகரில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் பேசியதாக ஹரியானாவின் முன்னாள் அமைச்சர் அஜய் யாதவ் கூறினார். ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். "அரசு மருத்துவமனையில் எந்த வசதிகளும் இல்லை என்றாலும், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கூட அரசு ஆதரவளிக்கத் தவறிவிட்டது" என்று அஜய் யாதவ் குற்றம்சாட்டினார்.
இந்த விவவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள துணை ஆணையர் ரேவாரி தலைமையிலான குழு, அதன் அறிக்கையை 48 மணி நேரத்தில் சமர்ப்பிக்கும் என்று மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.