மத்தியப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் அவரது மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரசேத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.என்.அகர்வால் (79). இவரது மகள் ஷைலா அகர்வால், ஷிவ்புரி பகுதியில் அனாதைகள் இல்லம் நடத்தி வந்துள்ளார். இங்கு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனைதொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்துல்களுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கே.என்.அகர்வால் அவரது மகள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவர்கள் நடத்தி வந்த இல்லத்தில் சுமார் 23 சிறுமிகள் இருந்துள்ளனர். இவர்களில் 6 பேர் 11 -16 வயதுடைய சிறார்கள். இவர்களை அகர்வால் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய மகளே உடந்தையாக இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக வெளியில் எதுவும் சொல்லக் கூடாது என சிறுமிகளை அவர் மிரட்டியுள்ளார்.
பேராசிரியர் அகர்வால் சிறுமிகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதுதொடர்பாக அவரது மகளிடம் புகார் தெரிவித்தபோது அவர் தாக்கியதாகவும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.
இந்தவழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அருண்குமார் வர்மா குற்றவாளிகள் கே.என்.அகர்வால் மற்றும் அவரது மகள் ஷைலா அகர்வால் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் ரூபாய் 16,000 அபராதம் விதித்துள்ளது.
காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சிறார்களை பாதுகாப்பதற்கான போக்சோ சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முன்பு இருந்த சட்டத்தின்படி மோசமான பாலியல் தாக்குதலுக்கு அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் ஷரத்தே இருந்தது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலையடுத்து உடனடியாக இந்தச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.