தமிழகத்தின் முக்கிய நகரங்களில் குடிநீர்த் தேவை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நிலத்தடி நீரோ படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே மக்கள் மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.
தமிழக வானில் மழை மேகங்கள் வரிசை கட்டும் இந்தக் காலகட்டத்தில், பூமியின் மழை மேகங்களான நிலத்தடி நீர் குறித்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. உலக அளவில் அதிகம் நிலத்தடிநீர் உறிஞ்சப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 80 சதவீத மக்கள் நிலத்தடிநீரைக் குடிக்க பயன்படுத்துகின்றனர். 66 சதவீத மக்கள் வேளாண் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர். நாடு முழுவதும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்திற்கு உரிய, கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது.
அதன்படி, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலும், பஞ்சாப் 2ஆம் இடத்திலும், ஆந்திரா 3ஆம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2007 முதல் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் 87 சதவீத கிணறுகளில் நிலத்தடிநீர் குறைந்து உள்ளது. 13 சதவீத கிணறுகளில் மட்டுமே நிலத்தடிநீர் உயர்ந்துள்ளது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரங்களின் படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 142 ஒன்றியங்களில் கிடைக்கும் மழைநீரின் அளவைவிட, நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவு அதிகமாக உள்ளது. 33 ஒன்றியங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுபவையாக மாறிவருகின்றன. 57 ஒன்றியங்கள் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுபவையாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன.
மேலும், தமிழகத்தில் 77 சதவீத நிலத்தடி நீர்வளம் அழிக்கப்பட்டுவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இதனால் மக்கள் மீண்டும் மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டினால் மட்டுமே தமிழகத்தால் இனிவரும் காலங்களில் நீர்த்தேவைகளை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கடுமையாக அமல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம் நல்ல பலனைக் கொடுத்தது. அந்தத் திட்டம் மீண்டும் சரியாக செயல்படுத்தப்பட்டால் மீண்டும் நல்ல பலன்களைப் பெறலாம் என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். மக்கள் இதனைத் தாங்களாகவே முன்வந்து செயல்படுத்தினால் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.