கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களாவை சேர்ந்தவர் மூதாட்டி ஜோசப் கிரேஸ் (76). இவர் தங்கியுள்ள வீட்டுக்கு பக்கத்தில் இவருக்கு சொந்தமான காலி இடம் இருக்கிறது. காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரிகள், தங்கள் பசுக்களை காலை வேளையில் இங்கு மேயவிட்டுவிடுகின்றனர். அவைகளும் புற்களை மேய்ந்துவிட்டு, மாலையில் மீண்டும் கொட்டகைக்கு வந்துவிடுகின்றன.
இந்நிலையில், வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை பார்த்து உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உரிமையாளர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, காலி நிலம் அருகில் உள்ள ஜோசப் கிரேசின் வீட்டை காண்பித்தனர். அவரிடம் கேட்டபோது, கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை பசுக்கள் மீது ஊற்றியதாக தெரிவித்துள்ளார். தனது காலி இடத்தில் வந்து பசுக்கள் மேய்வதாலே ஆசிட் ஊற்றியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாடு உரிமையாளர்கள், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிட் ஊற்றியதில் 18 பசுக்களுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மூதாட்டியின் இந்த செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.