‘பீகார் டூ மேற்கு வங்கம்’: வீட்டிற்கு 320 கிமீ சைக்கிளில் சென்ற 75 வயது முதியவர்..!

‘பீகார் டூ மேற்கு வங்கம்’: வீட்டிற்கு 320 கிமீ சைக்கிளில் சென்ற 75 வயது முதியவர்..!
‘பீகார் டூ மேற்கு வங்கம்’: வீட்டிற்கு 320 கிமீ சைக்கிளில் சென்ற 75 வயது முதியவர்..!
Published on
75 வயதான முதியவர் ஒருவர்  320 கி.மீ தூரம் மிதிவண்டி பயணத்தில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
 
நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. ஆகவே இந்தச் சிரமத்தை எப்படியாவது சமாளித்துவிட்டு 14 ஆம் தேதிக்குப் பின் தனது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடலாம் எனப் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நினைத்திருந்தனர். பிற மாநிலங்களில் தினக் கூலிகளாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்கள் வேலையில்லாததால் இந்த முடிவை எடுத்திருந்தனர். 
 
 
ஆனால் 144 தடை ஆணை முடிவுக்கு வருவதற்கு முன்பே மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. ஆகவே பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகினர். ஆகவே சிலர் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல நடந்தே பயணிக்கவும் முடிவெடுத்தனர். 
 
இந்நிலையில்தான், 75 வயதான முதியவர் ஒருவர்  320 கி.மீ தூரத்தை மிதிவண்டி பயணத்தில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். பீகார் மாநிலம் சுபாலில் உள்ள ஒரு  சந்தையில் மீன் விற்பனை செய்து வருபவர் சூர்யா காந்தா சவுத்ரி.  ஊரடங்கு உத்தரவுக்குப் பின் சந்தை மூடப்பட்டதால் இவருக்கு முறையான வருமானம் கிடைக்கவில்லை. ஆகவே அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பல நாட்களைப் பணமில்லாமலே ஓட்டியுள்ளார். அதன்பின்னர் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட இவர் முடிவெடுத்துள்ளார். மேற்கு வங்கத்திற்குத் தனது சைக்கிள் மூலம் செல்ல தீர்மானித்துள்ளார். மொத்தம்  மூன்று நாட்களில் 320 கி.மீ பயணித்து வீடு திரும்பியுள்ளார் சூர்யா காந்தா சவுத்ரி. 
 
 
கடந்த புதன்கிழமை மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் உள்ள மோத்தாபரியை அடைந்த, இந்த 70 வயது முதியவர் வீட்டிற்குச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக, அவர் நேராக தொகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்கு (பி.டி.ஓ) சென்று,  பீகாரிலிருந்து வந்ததாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். அங்குத் தன்னை கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்தப் பயணத்தின்போது, சவுத்ரி முகக் கவசம் எதுவும் அணியவில்லை, ஆனால் அவரது முகத்தை ஒரு துண்டினால் மூடி வைத்திருந்தார்.  பீகார் மாநிலம் மற்றும் மேற்கு வங்கத்திற்கும் இடையில் எல்லையாக  கிஷன்கஞ்ச் போலீஸ்காரர்கள் அவரைக் கடந்து செல்ல அனுமதித்துள்ளனர்.
 
 
இது குறித்து, ரத்பரி பஞ்சாயத்துத் தலைவர் சஹானாரா கத்துன், “அவர் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  அப்போது அவருக்கு எந்த அறிகுறியும் காட்டப்படவில்லை. எனவே அவர் 14 நாட்கள் வரை வீட்டில்  தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், அல்பாரா கிராமத்தில் உள்ள அவரது அண்டை வீட்டார்கள் அவரை அனுமதிக்கவில்லை. எனவே அரசின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்” என்று  கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com