புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நினைவு நாணயம், இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்படுகிறது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணின் சிங்க தலைநகரம், அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற வாசகம் இடம் பெறுகின்றன. இடது பக்கத்தில் "பாரத்" என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், வலதுபுறத்தில் "இந்தியா" என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
நாணயத்தின் மறுபக்கம் நாடாளுமன்ற வளாகத்தின் படமும், மேல் சுற்றளவில் சன்சாத் சங்குல் என்பது தேவநாகரி எழுத்திலும், கீழ் சுற்றளவில் Parliament Complex என்பது ஆங்கில எழுத்திலும் எழுதப்பட உள்ளது. நாணயம் 44 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு பகுதிகளை கொண்டது. அலாய் மூலம் நாணயம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா அன்று 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் 'செங்கோல்' நிறுவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.