(கோப்பு புகைப்படம்)
பீட்ஸா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் டெல்லியில் 72 குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் மற்றும் சாலையோரம் தங்கியிருப்பவர்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக உணவகங்களில் பார்சல் கொடுப்பது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தெற்கு டெல்லியில் பீட்ஸா டெலிவரி செய்யும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், அந்த நபருடன் பணிபுரிந்த 16 ஊழியர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பிற்கு கீழ் கொண்டுவந்துள்ளது. அவர்களிடம் கொரோனா அறிகுறிகள் தென்படுகிறதா ? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் அந்த நபர் பீட்ஸா டெலிவரி செய்த 72 குடும்பங்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறதா ? எனக் கண்காணிக்கவும், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அந்த 72 குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பீட்ஸா டெலிவரி நபர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.